திருப்பூர் மாவட்டம், காங்கயத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சிவன்மலை. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட தலமாகும்.
இங்கு, மூலவராக சுப்ரமணிய சுவாமியும், உற்சவராக வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியரும், வள்ளி, தெய்வானையும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
சிவபெருமான் மேரு மலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த சிறுதுண்டே சிவன் மலை எனப்படுகிறது. சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார்.
சிவன்மலை திருக்கோவில் மிகவும் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கும், நாட்டிற்கும் ஏற்படும் நல்லது, கெட்டதை முன்னதாகவே உணர்த்துகிறது.
இங்குள்ள முருகன் தனது பக்தர்களின் கனவில் சென்று ஏதாவது ஒரு பொருளைச் சொல்லி விட்டு மறைந்துவிடுவார். அந்த பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும்.
உதாரணத்திற்கு சுனாமி வந்தபோது கடல் நீரும், மஞ்சள் விலை ஏறியபோது மஞ்சளும் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதபோல, இந்தியா – சீனா யுத்தம் வந்தபோது துப்பாக்கி வைத்து பூஜை செய்யப்பட்டது. இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி சிறப்பு வாய்ந்த சிவன்மலையில், கந்த சஷ்டி விழா 14-ம் தேதி முதல் துவங்குகிறது. காலை, மாலையில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா, 18 -ம் தேதி நடைபெறுகிறது.