நியூசிலாந்து அணி 23 வது ஓவர் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில் பதும் நிஸ்ஸங்கா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய சதீர சமரவிக்ரமா 1 ரன்னிலும், சரித் அசலங்கா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய குசல் பெரேரா சற்று சிறப்பாக விளையாடி 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 28 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மஹீஸ் தீக்ஷன நிதானமாக விளையாடி 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 91 பந்துகளில் 38 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் இலங்கை அணி 47 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்களும், ரச்சின் ரவீந்திரன், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.
தொடக்க வீரர்கள் இருவரும் ஆரம்பத்திலிருந்தே அசத்தலாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர். இதில் டெவன் கான்வே 9 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 42 பந்துகளில் 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே சிறப்பாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 3 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 34 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 14 ஓவர்களில் ஆட்டமிழக்க இவரைத் தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் 7 ரன்களில் ஆட்டமிழக்க இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 17 ரன்களும், டாம் லாதம் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 23 வது ஓவர் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்களை வீழ்த்திய டிரெண்ட் போல்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.