தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகத்தின் வட மாவட்ட சந்தைகளில் ஆடு, கோழி உள்ளிட்டவை விற்பனை கோடிக் கணக்கான ரூபாயில் நடைபெறுவது வழக்கம்.
இதில், பிரபல சந்தையான குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளியை யொட்டி ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இந்த சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் பட்டையைக் கிளப்பியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் ரூ.7 கோடிக்கும் மேல் ஆட்டுச் சந்தையில் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் வியாபாரிகள் வருகை தந்து ஆடுகள் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆடு விலை வழக்கத்தை விட ரூ.2000 முதல் ரூ.5000 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆட்டுச்சந்தையில் சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் வருகை தந்து ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு குவிந்ததால், தீபாவளி பண்டிகை களைகட்டியது.