தெய்வநாயகி என்ற இயற்பெயர் கொண்ட கே. ஆர். விஜயா, 1948 -ம் ஆண்டு நவம்பர் 30 -ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் – மங்களம் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.
தமிழ் ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்பட்ட கே. ஆர். விஜயா. முதலில் நாடகங்களில் நடித்தவர், 1963 -ம் ஆண்டு ‘கற்பகம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியைப் தேடித் தந்தது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான படவாய்ப்புகள் வரிசைகட்டி வந்தன.
குறிப்பாக, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், நம்ம வீட்டுத் தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம், கல்தூண், மிருதங்க சக்ரவர்த்தி, கந்தன் கருணை போன்ற படங்களில் நடித்து அசத்தினார். அம்மன் வேடத்தில் நடித்து பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அன்றைய காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்ற இரண்டு மாபெரும் ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை கே.ஆர். விஜயாவுக்கு மட்டுமே உண்டு.
இப்படி பல பெருமைகளைக் கொண்ட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, திரையுலகில் 60 ஆண்டுகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதனால், திரையுலகில் உள்ள முக்கியப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். நாமும் வாழ்த்து தெரிவிப்போம்.