ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரனாய், ஹாங்காங் வீரர் லீ சியுக் யியுயை வீழ்த்தியுள்ளார்.
ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, குமாமோட்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது.
காயம் காரணமாக டென்மார்க், பிரெஞ்சு ஓபன் தொடர்களில் இருந்து விலகிய இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீரர் எச்.எஸ்.பிரனாய் மீண்டும் களம் திரும்பினார்.
இதில், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றவரான இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த வீரர் லீ சியுக் யியு ஆகியோர் முதல் சுற்று போட்டியில் விளையாடினர்.
விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், முதல் செட்டில் 22-20 என்ற புள்ளி கணக்கில் பிரனாய் கைப்பற்றினார். எனினும், அடுத்த செட்டை 19-21 என்ற புள்ளி கணக்கில் லீ சியுக் யியு கைப்பற்றினார்.
இதனால் மூன்றாது செட்டில் வெற்றி பெறுபவர் தான் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இரு வீரர்களும் கடுமையாக விளையாடினர்.
இந்த போட்டியில், 21-17 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை இந்திய வீரர் பிரனாய் தன்வசப்படுத்தி 2-1 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். இதனால் 2-வது சுற்றுக்கு பிரனாய் முன்னேறியுள்ளார்.
எனினும், காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியனான இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் முதல் சுற்று போட்டியில் தோற்றனர்.