இந்தியா 85 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இந்திய இராணுவ தளவாட தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு கணக்குப் பணி பயிற்சி அதிகாரிகள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.
அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உள்நாட்டு மற்றும் உலகளாவிய மட்டத்தில் நாடு பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய இராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் தங்கள் சேவையில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பங்களின் தோற்றம் மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்கள் வேகமாகப் பரவுவதால், வளர்ந்த நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவை உலகளவில் போட்டியிட வைப்பதிலும், அவர்களின் பங்கு இன்னும் முக்கியமானதாக மாறும். பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளம் அதிகாரிகளின் எண்ணங்கள், முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பெரிய அளவில் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைவதற்கான பயணத்தில் இந்தியா இறங்கியுள்ளது என்று கூறினார். தற்சார்பு, போட்டித்தன்மை மற்றும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதில் உள்நாட்டுத் தொழில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கம் பல கொள்கை முன்முயற்சிகளை எடுத்துள்ளது. உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஐ.ஓ.எஃப்.எஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்நாட்டுமயமாக்கலை முன்னெடுப்பவர்களாகவும் அனுசரணையாளர்களாகவும் இருப்பார்கள் என்றும், அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறன்களை மேம்படுத்த பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2013 -14 நிதியாண்டில் ரூபாய் 686 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, 2022-23 நிதியாண்டில் ரூபாய் 16 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 85 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனது திறன் மற்றும் வளர்ச்சியை இந்திய பாதுகாப்புத்துறை வெளிப்படுத்தி உள்ளது என்று கூறினார்.