முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்க மறுத்தும், மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் உரையை கண்டித்தும் தமழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவது தொடர்பாக முதல் அமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர்.
பாஜக சார்பில், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது சபாநாயகர் அறிவுறுத்திய பிறகும் ஆளுநர் குறித்து பேசியதை ஏற்க முடியாது என்றும், முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. வேந்தர் என்பவர் அரசின் பரிசீலனைக்கு உட்பட்டு தான் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
தற்போது அப்படி இல்லை என்பதால் எதிர்ப்பதாகவும், . வேந்தர் பதவி அரசியல் பதவியாக இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும், சட்டசபையை பொதுக்கூட்ட மேடையாக மாற்றக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுத்தும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் உரையை கண்டித்தும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.