ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில், வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 33 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு 16 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் 43 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணியை வீழ்த்தி 6-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதை அடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையும், வீரர்களுக்குப் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதேபோன்று, 2-வது இடம் பிடித்துள்ள இந்திய அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 33 கோடி (4 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டாவது இடம் பிடித்துள்ள, இந்திய அணிக்கு, ரூபாய் 16 கோடி (2 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்துக்கு ஆறரை கோடி ரூபாயும், தென்னாப்பிரிக்க அணிக்கு ஆறரை கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, அரை இறுதி சுற்றுக்குத் தகுதி பெறாமல், முதல் சுற்றில் வெளியேறிய ஆறு அணிகளுக்கும் தலா 83 இலட்சம் ரூபாய் பரிசு தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் ஒரு வெற்றிக்கு தலா 33 இலட்சம் ரூபாய் என்ற பரிசுத்தொகை தனியாக வழங்கப்படுகிறது.