பஞ்சாப் மாநிலம் கபுர்தலா நகரிலுள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 போலீஸார் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் சுல்தான்பூர் லோதியில் அகல் புங்கா சாஹிப் என்கிற குருத்வாரா அமைந்திருக்கிறது. இந்த குருத்வாராவை நிஹாங்க் சீக்கியர் பிரிவைச் சேர்ந்த (ஆயுதம் தாங்கிய குழு) இரு தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், பாபா மான் சிங் என்பவர் தலைமையிலான ஒரு பிரிவினர் குருத்வாராவைக் கைப்பற்ற முயன்றனர். இதற்கு, சாண்ட் பல்பீர் சிங் தலைமையிலான மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சாண்ட் பல்பீர் சிங் குழுவைச் சேர்ந்த 2 பேரை பாபா மான் சிங் தலைமையிலான குழுவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையறிந்த போலீஸார், மோதலைத் தடுக்க கபுர்தலாவில் உள்ள குருத்வாராவுக்குச் சென்றனர்.
அப்போது நிஹாங்க் குழுவைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில், ஜஸ்பால் சிங் என்கிற போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து சுல்தான்பூர் லோதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபா மான் சிங் குழுவைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.