புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டி இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுபடை வீடுகளில் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா மிக உற்சாகமாக நடைபெறுவது வழக்கம்.
விழாவையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் முருக பக்தர்கள் திரண்டு வருவர்.
இந்த நிலையில், திருக்கோவில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மறுத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்காக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கோவில் மலை மீது தீபம் ஏற்றவும் அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால், காவல்துறை மற்றும் இந்து சமய அறிநிலையத்துறை அதிகாரிகள் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. மாறாக, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் 25-ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதனால், திருப்பரங்குன்றம் பகுதியைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.