ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. இவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை திக்குமுக்காட வைத்தனர்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்ததாகவும், 3,500 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காஸா மீது முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது.
இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 14,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 30,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், காஸா நகரில் மின்சாரம், குடிநீர், மருந்து என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து, அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை ஹமாஸ் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதற்கு, இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை விடுவித்தால், பிணைக் கைதிகளை விடுவிப்பதாகத் தெரிவித்தனர்.
இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக நேற்று 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கிறார்கள். பதிலாக, இஸ்ரேலும் 39 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்திருக்கிறது.
இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஆஷர் குடும்பத்தைச் சேர்ந்த டோரன் கட்ஸ்-ஆஷர், ராஸ் ஆஷர் , மற்றும் அவிவ் ஆஷர், அலோனி குடும்பத்தைச் சேர்ந்த டேனியல் அலோனி, அமெலியா அலோனி ஆகியோர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும், மோண்டர் குடும்பத்தைச் சேர்ந்த ரூத் மோண்டர், கெரன் மோண்டர், ஓஹாட் மோண்டர், இஸ்ரேலிய பிரஜைகள் ஆதினா மோஷே, ஹனா கட்ஸிர், மார்கலிட் மோஸஸ், ஹன்னா பெர்ரி, யாஃபே ஆதார் ஆகியோரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் நாடு திரும்பியதும் உறவினர்களிடம் செல்லும்போது, அனைத்து பாதுகாப்புப் படையினருடன் அரசாங்கமும் சென்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், “முதல்கட்டமாக பிணைக் கைதிகளில் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு முழு உலகம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தாயகம் திரும்பும் எங்கள் குடிமக்களை இஸ்ரேலிய அரசாங்கம் அரவணைக்கிறது. கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் அனைவரையும் திருப்பி கொண்டு வருவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.
எங்கள் குடிமக்கள் ஆரம்ப மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பிணைக் கைதிகள் திரும்பி வந்தது குறித்து, நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறது.