நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 -ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முறைப்படி அறிவித்துள்ளார்.
வழக்கமாக, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு ஒரு நாள் முன்னதாக அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்படும். ஆனால், டிசம்பர் 3 -ம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியாக உள்ளதால், இந்த முறை ஒரு நாள் முன்னதாகவே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஐபிசி, சிஆர்பிசி மற்றும் ஆவணச் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக 3 புதிய சட்டங்களை நிறைவேற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம் பெற்றுக் கொண்டு, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற நெறிமுறைக் குழு அளித்த அறிக்கையின்படி, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.