இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் ரசிகர்களின் அன்பான சின்ன தலையுமான சுரேஷ் ரெய்னாவின் பிறந்த நாள் இன்று.
சுரேஷ் குமார் ரெய்னா உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் 27 நவம்பர் 1986 அன்று காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேசத்துக்காக விளையாடிய இவர் ஆக்ரோஷமான இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். அவ்வப்போது ஆப் ஸ்பின்னில் பந்துவீசவும் தவறியதில்லை.
இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையுடைவர் ரெய்னா. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாகவும் இருந்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ரெய்னா.
அவர் இந்திய அணியில் இருந்த காலத்தில், 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றார். ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் படைத்தார்.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களால் 2020 இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகினார். 6 செப்டம்பர் 2022 அன்று, ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல் 2010 யின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பிசிசி யால் ரெய்னா “சிறந்த பீல்டர்” விருது பெற்றார்.
2021 ஆம் ஆண்டில், ஐபிஎல் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடிய நான்காவது வீரரானார் ரெய்னா, எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையை ரெய்னா நிகழ்த்தினார்.
இப்படி பல சாதனைகள் படைத்து கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்திருக்கும் IPL, ரசிகர்களின் சின்ன தல சுரேஷ் ரெய்னா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.