இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பதிலாக சிறையில் இருந்து 33 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இன்று விடுதலை செய்தது.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்திருக்கிறது. இரு தரப்பு மோதலில் இஸ்ரேலில் 1,400 பேரும், காஸாவில் 14,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 30,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.
இதனிடையே, இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க கத்தார் உதவியுடன் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பயனாக முதலில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நேற்று பின்னிரவு பெண்கள், குழந்தைகள் உட்பட மேலும் 11 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்திருக்கிறது.
இதற்கு பதிலாக 33 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் இன்று காலை விடுதலை செய்தது. இவர்கள், மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல, ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 240 பேரில் இதுவரை 62 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேசமயம், காஸா நகரில் 2 இஸ்ரேலியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மீதி உள்ளவர்களையும் மீட்கும் வகையில் ஒவ்வொரு 10 பேர் விடுதலைக்கும் ஒரு நாள் போர் நிறுத்த செய்ய இஸ்ரேல் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்த தற்காலிகப் போர் நிறுத்தம் காரணமாக காஸா நகருக்கு கடந்த 4 நாட்களாக ஐ.நா.வின் நிவாரண வாகனங்கள் பெருமளவில் சென்றடைந்திருக்கின்றன. இதற்கிடையே, இஸ்ரேல் வந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், போரினால் பாதிக்கப்பட்ட காஸாவின புனரமைப்புக்கு உதவுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.