சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடைபெற்றது தொடர்பாக, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வழக்கு சம்பந்தமான விவரங்களைப் பெறுவதற்குத்தான் சம்மன் அனுப்பப்பட்டது என்றும், மணல் கொள்ளை தொடர்பாகப் பதிவு செய்துள்ள வழக்கு விவரங்களை டிஜிபி கொடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை ஆட்சேபனை மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் காலஅவகாசம் அளிக்கப்பட்டது.
மேலும், சம்மன்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுவதாகவும், அமலாக்கத்துறை விசாரணைக்கு எந்த ஒரு தடையும் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை டிசம்பர் 19 -ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.