கோவாவில் நடைபெற்று வரும் 54 வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸ், “இந்தியா சிறந்தவரின் கரங்களில் உள்ளது” என்று பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
54-வது சர்வதேச திரைப்படவிழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான மைக்கேல் டக்ளஸ் என்பவர் கலந்துக்கொண்டார்.
அவர் திரைப்படவிழா மற்றும் பிரதமர் மோடியின் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றை பற்றி புகழ்ந்து பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த திரைப்பட விழாவில், 78 வெளிநாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவே, இந்த விழாவிற்கான தனித்தன்மையையும், அழகையும் காட்டுகிறது.
இது, உலகம் முழுவதும் அறியப்படுகிற மற்றும் புகழப்படுகிற இந்திய திரைப்படங்களின் வலிமையை பிரதிபலிக்கிறது. நீங்கள் சிறந்தவரின் கரங்களில் இருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் அவர், மத்திய தகவல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரின் முயற்சிகளுக்கும் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்புகள் மற்றும் அதற்கான நிதி செலவினம் ஆகியவற்றில் அதிகம் பணம் போடப்படுகிறது.
இது ஒரு வெற்றிக்கான தருணமாகவும் உள்ளது அதேபோல் இனம், மதம் மற்றும் பாலின வேற்றுமையின்றி மக்களை திரைப்படங்கள் ஒன்றிணைக்கின்றன ” என்று தனது உரையை முடித்தார்.