வங்கதேசத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதேபோல், நவம்பர் 3-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் இன்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதேபோல், கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி 5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.