ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணை வீச்சு சம்பவம் நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆகவே, மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஹமாஸ் ஆதரவு அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சிரியா, ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பினர் அமெரிக்க இராணுவ முகாம்கள் உள்ளிட்ட நிலைகளின் மீது சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் பகுதி பலத்த பாதுகாப்பு மிக்க “பச்சை மண்டலம்” என்று அழைக்கப்படும் பகுதியாகும். இங்குதான் ஈராக் அரசுக் கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. இப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தூதரக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், “பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணிக்கு தொடர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். எனினும், இதில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை” என்றாார்.
ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி காட்யுஷா வகையைச் சோ்ந்த 14 ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன” என்றனர்.
இதனிடையே, ஈராக்கிய கதாயிப் சயீத் அல் ஷுஹாதாவின் தளபதி அபு அலா அல் வாலே கூறுகையில், “காஸாவிலும், அமெரிக்காவிலும் சியோனிச குற்றங்கள் தொடரும் வரை நடவடிக்கைகளை நிறுத்துவது அல்லது தளர்த்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.
கடந்த மாதம் கதாயிப் சயீத் அல் ஷுஹாதாவையும், அதன் பொதுச் செயலாளரையும் உலகளாவிய தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஈராக் அதிபர் முகமது ஷியா அல் சூடானி கூறுகையில், “தூதரகங்களை இலக்கு வைப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. தாக்குதலுக்கு காரணமானவர்களை தனது அரசாங்கம் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும்” என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “ஈராக்கில் சுதந்திரமாக செயல்படும் ஈரானுடன் இணைந்த போராளிகள், ஈராக்கில் உள்ள எங்கள் பணியாளர்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எங்கள் கூட்டாளிகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.