மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், அமலாக்கத்துறை வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால், துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் இணைந்து மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இவர்கள் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த செயலி கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்ரில் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு 508 கோடி ரூபாய் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட செயலி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதைத்தொடர்ந்து, இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு, சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தது.
ரவி உப்பால் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு என்ற நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பதையும், அதைப் பயன்படுத்தி அவர் சுதந்திரமாக சுற்றித் திரிவதையும் அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.
இந்த நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியின் இரண்டு முக்கிய உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால், துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரவி உப்பாலை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக, அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.