சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 1.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 18-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூா்வமாக பதிலளித்திருக்கிறார்.
அப்பதிலில், “சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014 ஜனவரி முதல் 2023 அக்டோபா் 31-ம் தேதி வரை 1,16,792 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது. மேலும், 16,637.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தடைச் சட்டம் 2018-ன் கீழ் 16,740.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 15,038.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், கடந்த 2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023 மாா்ச் 31-ம் தேதி வரையிலான 4 ஆண்டு காலத்தில் மட்டும் 69,045.89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி இருக்கிறது. அதேபோல, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளில் 4 பேர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
தவிர, 3 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.