தலைநகர் டெல்லியில் இன்று காலை வெப்பநிலையானது 5 டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைந்ததால், சிம்லாவை விட அதிக குளிர் நிலவி வருகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று வெப்பநிலை ஐந்து டிகிரிக்கும் கீழே குறைந்தது. டெல்லியில் இன்று வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் பதிவான வெப்பநிலையை விட டெல்லியில் குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது. சிம்லாவின் வெப்பநிலையானது 6.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.
இதற்கிடையே, நேற்று தலைநகர் டெல்லியில் வெப்பநிலை அதிகபட்சமாக 24.1 டிகிரியாக பதிவாகியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக 4.9 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துள்ளது.
இந்த பருவத்தில் இதுதான் டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை ஆகும். மேலும், ஓரிரு நாட்களுக்கு டெல்லியின் வெப்பநிலை இதேபோல் தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்றின் தர அளவு மிக மோசமாக உள்ளது. டெல்லியின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை காற்றின் தரக்குறியீடு 250-க்கும் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக ஆனந்த விகார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 475-ஆக பதிவாகியுள்ளது.
டெல்லி உட்பட வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.