விபத்தில் 16 பேர் உயிரிழக்கக் காரணமான இந்திய டிரைவரை நாட்டை விட்டு வெளியேற்ற கனடா முடிவு செய்திருக்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜஸ்கிரத் சிங் சித்து. டிரக் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, சஸ்காட்செவன் நெடுஞ்சாலை-35 மற்றும் சஸ்காட்செவன் நெடுஞ்சாலை-335 பகுதியில் இருக்கும் சஸ்காட்செவன் ஆர்ம்லிக்கு அருகிலுள்ள சந்திப்பில் மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தினார்.
அதாவது, எதிர்திசையில் டிரக்கை ஓட்டி வந்த சித்து, சிக்னலை கவனிக்காமல் ஜூனியர் ஹாக்கி அணியை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது மோதினார். இதில், ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பிறகு இவ்வழக்கில் சித்துவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்துவுக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் பரோல் வழங்கப்பட்டது.
அதேசமயம், சித்துவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கனடா எல்லை சேவைகள் நிறுவனம் பரிந்துரைத்தது. ஆனால், இதுகுறித்து கூட்டாட்சி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த சித்து, தனது தவறை ஒப்புக் கொள்வதாகவும், தண்டனையை ஏற்றுக் கொள்வதாகவும், நாட்டை விட்டு மட்டும் வெளியேற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சித்து செய்த தவறால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, சித்து கனடா நாட்டை விட்டு வெளியேற்றப்படவிருக்கிறார்.