திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சிறப்புமிக்க தலங்களில் விழுப்புரம் அருகே உள்ள இரும்பை மாகாளநாதர் திருத்தலமும் ஒன்றாகும்.
இத்திருத்தலத்தில் மூலவர் மாகாளநாதர், மாகாளேஸ்வரர் என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். குயில்மொழியம்மை, மதுசுந்தரநாயகி என்னும் திருநாமங்களுடன் அம்பாள் தரிசனம் தருகின்றாள்.
இத்திருத்தலத்தின் விருட்சமாக புன்னை மரம் உள்ளது. இத்திருத்தலத்தின் தீர்த்தமாக மாகாள தீர்த்தம் உள்ளது. இத்திருத்தலத்தில் வாழ்ந்த கடுவெளி சித்தர் சிற்றரசனுக்காகவும், மக்களுக்காகவும் மழை வர வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.
அப்போது, இடையூறு நேரவே, அனைவரும் அவரை எள்ளி நகையாடினர். இதைக் கண்ட சித்தர் சிவபெருமானை வேண்ட, லிங்கம் மூன்றாக பிளந்தது. இதனால், பயந்து போன மன்னனும், மக்களும் தங்களுடைய தவற்றை உணர்ந்து சித்தரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
இதனையடுத்து சித்தர் இறைவனை வேண்டி பாடல் பாட, மீண்டும் லிங்கம் ஒன்று சேர்ந்தது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
இந்திய திருநாட்டில் மூன்று சிவ தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விளங்குகின்றன.
அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம் ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்திற்கு சென்று இரும்பை மாகாளநாதரை வணங்கினால், திருமண தடையும், நாகதோஷமும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.