சமீபத்தில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்போறோம் என்று கூறி 30 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். இப்போது அங்கிருந்து இந்த கார் பந்தயம் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கடலூர் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று, பின்னர் தனது கைக்குழந்தையுடன் சாராயக் கடையை எதிர்த்து மறியலில் ஈடுபட்டுப் போராடிய கடலூர் அஞ்சலை அம்மாள் பிறந்த மண்.
தற்போது திமுக அரசாங்கம் தெருவுக்கு தெரு டாஸ்மாக் நடத்தி வருகிறது. லட்சத்தீவு இந்தியாவுடன் இணைந்து இருப்பதற்குக் காரணமான ஆற்காடு ராமசுவாமி முதலியார் மற்றும் ஆற்காடு லட்சுமண ஸ்வாமி முதலியார் வாழ்ந்த மண்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் இவர்களைக் குறித்துப் பேசினார். ஆனால், தமிழக மாணவர்களுக்கு இவர்களைப் பற்றி பாடத்திட்டங்களில் இல்லை.
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 68,373 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,91,132 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,07,213 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,40,883 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 2,88,332 பேருக்கு பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், 84,636 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் பெறுகிறார்கள், 6,935 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மத்திய அரசு வழங்கியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
கடந்த ஆட்சியில் கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கீடானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க செலவு செய்த பணம் வீணாகியிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்போறோம் என்று கூறி 30 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். இப்போது அங்கிருந்து இந்த கார் பந்தயம் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
தமிழகம் முழுவதுமே இதைத் தான் செய்கிறார்கள். தமிழக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். கடலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர், கொலை வழக்கில் சிக்கியிருக்கிறார். அவர் மீது வழக்கு பதியவே தமிழக பாஜக நிர்வாகிகள் போராட வேண்டிய நிலையில், திமுக ஆட்சியில் நேர்மையான விசாரணை நடைபெற்று அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை.
ஆட்சிக்கு வந்ததும், நெல், கரும்பு, வாழைக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்து வழங்குவோம் என்று கூறிய திமுக, நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்லைப் பாதுகாக்க தார்பாய்கள் கூட முழுமையாக வழங்கவில்லை. இது தான் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் லட்சணம்.
மக்கள் நலனுக்கோ, அவரது வேளாண்மைத் துறையிலோ இதுவரை நிகழ்ச்சிகள் நடத்தாமல், தனது மகனுக்குப் பதவி வாங்க, உதயநிதி பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.
கடலூருக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் சுத்திகரிப்பு ஆலைகள், கொண்டங்கி ஏரி தூர்வாரப்படும், கடலூரில் அரசு பொறியியல் கல்லூரி, கைத்தறிப் பூங்கா, காகிதத் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா, மீன்வளக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு என ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். தமிழக மக்கள் நலமுடன் வாழ, நலத்திட்டங்கள் தொடர, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.