இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.
எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு என்னை நேரில் சந்திக்க தேவையில்லை. அந்தளவுக்கு நாங்கள் முடிவெடுப்பதில் வெளிப்படையாகவும், விரைவாகவும் இருக்கிறோம். குறித்த நேரத்திற்குள் மிகவும் தரமாக வேலையை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.
அமைச்சகம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வங்கியாளர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாகக் கருதுகிறோம். தரமான வேலைகளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அதனால்தான் 7 உலக சாதனைகளைச் செய்ய முடிந்தது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மகத்தான சாதனை இது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இருக்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அதேபோல, 5 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக மாற்றமடையும், குறைந்த அளவு மாசுபாட்டுடன் போக்குவரத்து மாறும்.
மேலும், நெரிசல் மிகுந்த பெருநகரங்களில் 65,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான துவாரகா எக்ஸ்பிரஸ்வே மிகவும் முக்கியமானது. இது தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகாவில் இருந்து ஹரியானா மாநிலம் குர்கான் அருகில் உள்ள கேர்கி தவுலா டோல்கேட் வரை 27.6 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.
வரும் 2025-ம் ஆண்டு இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பயன்பாட்டிற்கு வரும். இது 8 வழிச் சாலையாக அமைக்கப்படுவதுதான் கூடுதல் சிறப்பு. அதோடு, உயர்மட்ட சாலையாக 8 வழிச் சாலை அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 16 வழிச் சாலைகள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.
இது தவிர, நகர்ப்புற விரிவாக்க 6 வழிச்சாலை (ரூ.8,000 கோடி), கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலை (ரூ.12,000 கோடி), மற்றும் டெல்லி – மீரட் அதிவேக நெடுஞ்சாலை (ரூ.8,000 கோடி) ஆகியவை முக்கியமான திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மணாலி மற்றும் லஹால் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கு இடையிலான ரோஹ்தாங் கணவாயில் அடல் சுரங்கப் பாதையானது, பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 8 நிமிடமாகக் குறைத்திருக்கிறது.
அதேபோல், கத்ரா – டெல்லி அதிவேக நெடுஞ்சாலை, டெல்லி மற்றும் அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும், டெல்லி மற்றும் கத்ரா (ஜம்மு காஷ்மீர்) இடையே 6 மணி நேரத்திலும், டெல்லி மற்றும் ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும் சென்றுவிடலாம். தற்போது லடாக்கில், சோஜிலா கணவாயில் ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதையின் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது ரோப்வேக்கள், கேபிள் கார்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பொதுப் போக்குவரத்தை இயக்கி வருகிறது. மின்சாரப் பேருந்துகளை அதிக நகரங்களில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, புதிய எல்லைப் புறச் சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க வசதியாக 30 சாலைகள் உள்ளன. ஹெலிபோர்டுகள் மற்றும் ட்ரோன் துறைமுகங்களை கொண்ட 670 சாலையோர வசதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது” என்றார்.