2023-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2023-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை இன்று அறிவித்தது.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்குப் பிறகும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது பேட்மிண்டன் வீர்ர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூனா விருது வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி, கிரிக்கெட் வீர்ர் முகமது ஷமி, தடகள வீரர் சங்கர், செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு அறிவிக்கப்பட்டவர்கள் 2024 ஜனவரி 09 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதுகளைப் பெறுவார்கள்.