திருச்சி ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும், விரைவு இரயில்கள் நின்று செல்லும் எனத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படும் திருக்கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில். இந்த திருக்கோவில் பூலோகத்தின் வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது.
இத்தலம், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு போன்ற அரங்கத்தில் இறைவன் திருக்கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என அழைக்கப்படுகிறது. இந்த திருக்கோவிலின் இறைவன் ரங்கநாயகர் என்றும், தாயார் ரங்கநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், வைகாசி ஏகாதசி பெருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனால், திருச்சி மட்டுமல்லாது, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, ராஜபாளையம், நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வருகின்றனர்.
இதனால், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டியும், பக்தர்கள் நலன் கருதியும், திருச்சி ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும், அதாவது, 22 மற்றும் 23 -ம் தேதியும் விரைவு இரயில்கள் நின்று செல்லும் எனத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, சென்னை – கன்னியாகுமரி விரைவு இரயில் மற்றும் சென்னை – கொல்லம் விரைவு இரயில் ஆகியவை ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.