அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பங்கேற்கிறார்.
ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. நடப்பு ஆண்டின் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசி பங்கேற்றார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவருக்கு இந்தியா சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
2024 குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் ஆறாவது பிரெஞ்சு தலைவர் இம்மானுவேல் மக்ரோன் ஆவார். முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் 1976 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை பங்கேற்றுள்ளார்.
முன்னாள் அதிபர்கள் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டெயிங், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிரான்சுவா ஹாலண்டே ஆகியோர் முறையே 1980, 2008 மற்றும் 2016 இல் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.