2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியலிலிருந்து 2018 திரைப்படம் தேர்வாகாத நிலையில் அப்படத்தின் இயக்குநர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெரும் மழை பெய்து மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய படம் தான் 2018.
இப்படத்தைக் கேரளாவின் பிரபல மலையாள இயக்குநர் அந்தோணி ஜோசப் இயக்கினார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருந்தார்.
மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியாவின் பிற மொழிகளிலும் வெளியானது. அணைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பிரிவில் போட்டியிடுவதற்காக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுக்கும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியலில் 2018 படம் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் படங்களின் இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
88 சர்வதேச மொழித் திரைப்படங்களில் 15 படங்கள் இறுதி செய்யப்பட்டன. இதில் ‘2018’ படம் இடம் பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்காக எனது நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இருப்பினும், இந்தப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த எனக்குக் கிடைத்த இந்தக் கனவு பயணத்தின் வாய்ப்பை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன்.
அதிக வசூல் செய்த திரைப்படம் மற்றும் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ படம் என்ற பெருமை ஒவ்வொரு இயக்குநரின் வாழ்க்கையிலும் நிகழ வேண்டும், எதிர்பார்க்கும் அரிய சாதனையாகும். இந்தப் பயணத்துக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
படத்தின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த கனவின் ஆரம்பம் இன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருதுகள் காத்திருக்கின்றன. நான் கலந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.