நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, 5 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்தக் கோழிப் பண்ணைகளில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள், தமிழகம், கேரளா மற்றும் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரந்தோறும் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 75 காசுகளிலிருந்து 5 காசுகள் உயர்த்தி 5 ரூபாய் 80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய கொள்முதல் விலையில் புதிய உச்சமாகும்.
சென்னையில் சில்லறை விலையில் ஒரு முட்டையின் விற்பனை விலை 6 ரூபாய் 50 காசுகள் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.