ஜனவரி 2-ல் எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு, அமோனியா வாயு வெளிப்பட்டது.
இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தொழிற்சாலை மற்றும் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாயுக் கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல் துறை தகவல் அளித்துள்ளது.
இந்நிலையில், எண்ணூர் அமோனியா வாயு கசிவு தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளதாகவும், வருகின்ற ஜனவரி 2-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், தற்போது வாயு கசிவு வழக்கையும் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.