கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை முதலில் அமல்படுத்திய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் மாறி இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இத்திட்டமானது கைவினைக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக 2023 செப்டம்பரில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், 5 முதல் 7 நாட்களுக்கான அடிப்படை பயிற்சி, 15 நாட்களுக்கு மேலான பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. இத்திட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், யூனியன் பிரதேசங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை முதலில் அமல்படுத்திய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் மாறி இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 30 பேருக்கு ‘தர்ஸி கலை’ பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பட்நாகர் மற்றும் மத்திய திறன் மேம்பாடுத் துறைச் செயலாளர் அதுல் குமார் திவாரி ஆகியோர் நடத்தினர்.
அப்போது, “இத்திட்டம் கைவினைக் கலைஞர்கள் சமூகத்தை சுயதொழில் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை ஜம்மு காஷ்மீர் பெற்றுள்ளது” என்றார்.
மேலும், திறன் மேம்பாட்டின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் நிர்வாகத்தின் வேகத்தையும் சுட்டிக் காட்டினார். தவிர, மிக விரைவில் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.