மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது வீட்டுக்கு முன் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அமலாக்கத்துறையினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
















