மத்திய பிரதேச மாநிலம், போபாலில் வேட்டி, குர்தா அணிந்து வீரர்கள் வித்தியாசமாக கிரிக்கெட் போட்டியை விளையாடினர்கள். இப்போட்டி வர்ணனை சமஸ்கிருதத்தில் செய்யப்பட்டது.
சன்ஸ்கிரிதி பச்சாவோ மன்ச் என்ற பெயரிலான அமைப்பானது, சமஸ்கிருத மொழி பாதுகாப்புக்காக தனித்துவ கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.
மகரிஷி மகேஷ் யோகியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 4 நாட்கள் இந்த போட்டி தொடர் நடைபெறும். 3-வது ஆண்டாக நடத்தப்படும் மகரிஷி கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க கூடிய அணி வீரர்கள், வேட்டி மற்றும் குர்தா அணிந்தபடி விளையாடுவார்கள்.
பழமையான சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மகரிஷி மைத்ரி போட்டி தொடர் என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், வேதபாரம்பரியம் கொண்ட குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். பல்வேறு வேத மையங்களை சேர்ந்த அணிகள் விளையாடுகின்றன.
இந்த போட்டி தொடரில், மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன. கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணி வீரர்கள் ஒருவருக்கொருவர் சமஸ்கிருதத்திலேயே பேசி கொள்கின்றனர்.
அவுட், நோ பால் உள்ளிட்ட விசயங்களை நடுவரும் சமஸ்கிருதத்திலேயே கூறுகிறார். போட்டியில் தலா 10 ஓவர்கள் வீசப்படும். இதற்காக டென்னிஸ் பந்து ஒன்று பயன்படுத்தப்படுகிறது.
வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் ரூ.31 ஆயிரம் பரிசு தொகை கிடைக்கும். 2-வது பரிசு ரூ.21 ஆயிரம் மற்றும் 3-வது பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் நினைவு பரிசும் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு மற்றொரு வெகுமதியாக, சன்ஸ்கிரிதி பச்சாவோ மன்ச் அமைப்பினர் சார்பில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட உள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவில் போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று போட்டி தொடரை வழிநடத்தி செல்லும் பண்டிட் அங்குர் ஆச்சார்யா கூறியுள்ளார்.