சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் இரயிலில், மின் கசிவு காரணமாக பயணிகள் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் அச்சமடைந்தனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று மதியம் 1.50 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் இரயில் வழக்கம் போல் பயணிகளுடன் புறப்பட்டது. அந்த இரயில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது, டி1 பெட்டியில் இருந்த பயணி ஒருவர், செல்போனுக்கு சார்ஜர் ஏற்றுவதற்காக முயற்சி செய்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியுள்ளது. மேலும், பெட்டி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதனால், அலறியடித்த பணிகள் இது தொடர்பாக இரயில்வே ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், அருகில் உள்ள செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர், இரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இரயில் மதுரைக்கு இயக்கப்பட்டது. இந்த பிரச்சினை காரணமாக, வைகை எக்ஸ்பிரஸ் இரயில் சுமார் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.