மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில், தீட்சித் கோத்தாரி என்பவரை மும்பை குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் இணைந்து மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இவர்கள் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.
இந்த செயலி மூலம் மிகப்பெரிய பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்தச் செயலி மூலம் தினமும் 200 கோடி ரூபாய் வரை, இலாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை இலஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.
இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும், மகாதேவ் சூதாட்ட செயலியின் நிறுவனர்களான சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதைத்தொடர்ந்து, இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களான ரவி உப்பால் மற்றும் சௌரப் சந்திரகரை துபாய் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில், ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். 27 வயதான தீட்சித் கோத்தாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.