2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டி (கிஃப்ட் சிட்டி) முக்கியப் பங்கு வகிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் “வைபரன்ட் குஜராத்” உலக உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக ‘நவீன இந்தியாவின் விருப்பம் கிஃப்ட் சிட்டி’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பேசுகையில், “இந்திய தொழில்முனைவோர் சர்வதேச அளவில் நிதி மற்றும் மூலதனத்தை திரட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் நிதி மற்றும் மூலதனத்துக்கான முனையமாக கிஃப்ட் சிட்டி திகழ்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் 2047-ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை அடைய பல்வேறு ஃபின்டெக் ஆய்வகத்தை உருவாக்குவதை கிஃப்ட் சிட்டி இலக்காகக் கொள்ள வேண்டும்
மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட கிஃப்ட் சிட்டியின் சர்வதேச நிதிச் சேவை மைங்களில் (ஐ.எஃப்.எஸ்.சி.) பங்குகளின் நேரடி பட்டியல் வெளியீடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பட்டியல் வெளியீடு விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அவ்வாறு இந்தியாவில் பட்டியலிடப்படும் உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளை இந்திய நிறுவனங்கள் எளிதாக அணுக முடியும். நிதி நிறுவனங்களுக்கான வரிச் சலுகை மையமாகவும் கிஃப்ட் சிட்டி உருவெடுத்திருக்கிறது.
கிஃப்ட் சிட்டி சர்வதேச நிதிச் சேவை மையங்களில் தற்போது 3 பங்கு பரிவர்த்தனை மையங்கள், 9 வெளிநாட்டு வங்கிகள் உள்பட 25 வங்கிகள், 26 விமான கடனுதவி நிறுவனங்கள், 80 நிதி மேலாளர்கள், 50 தொழில் சேவை அமைப்புகள், 40 நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்தியாவை கப்பலுக்கான உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையில், 8 கப்பல் கடனுதவி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச கடனுதவியை கப்பல் கட்டுமான நிறுவனங்கள் பெற முடியும். இந்தியாவில் கப்பல் கட்டுமான நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கிஃப்ட் சிட்டி உலகுக்கான பன்முக நிதி தொழில்நுட்ப ஆய்வகங்களை கட்டமைத்து, இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளையும் பூா்த்தி செய்யும் மையமாக உருவெடுக்க வேண்டும். அதோடு, பசுமைக் கடன் வா்த்தகத்துக்கான தளத்தையும் உருவாக்க வேண்டும். அப்போதுதான் வரும் 2047-ல் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்கும் இலக்கை எட்ட முடியும்” என்றார்.