2022-23-ல் தோட்டக்கலை உற்பத்தி 355 மில்லியன் டன்னை தாண்டி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 8 மில்லியன் டன்கள் அதிகம் என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
2022-23-ம் ஆண்டுக்கான பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டை வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், “2022-23-ம் ஆண்டில் தோட்டக்கலை உற்பத்தி 355 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது 2021-22 உற்பத்தியை விட சுமார் 8 மில்லியன் டன்கள் அதிகம்.
நாட்டில் தோட்டக்கலை உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சாதனைக்கு விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசின் விவசாய நட்பு கொள்கைகளின் கடின உழைப்பே காரணம். 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, பழங்கள், காய்கறிகள், தோட்டப் பயிர்கள், வாசனைப் பொருட்கள், பூக்கள் மற்றும் தேன் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
2022-23-ம் ஆண்டில் பழ உற்பத்தி 109 மில்லியன் டன்னாகவும், காய்கறிகள் 213 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.