ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அந்நாட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவனி விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவில் உள்ள கடலில் மூழ்கி சிலர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலியா அவசர சேவைகள் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், கடலில் மூழ்கியிருந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதித்து உள்ளனர். 3 பெண்கள் உட்பட நான்கு பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலில் மூழ்கி உயிரிழந்த நான்கு பேரும், இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேயாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது. இந்த தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இறந்தவர்களின் குடும்பங்களுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.