மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் துணை பிரதமர் வல்லபாய் படேல் சிலை இடித்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தின் மேக்டோன் பகுதியில் முன்னாள் துணை பிரதமர் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த சூழலில், அந்தச் சிலையை சிலர் டிராக்டரால் மோதி இடித்துத் தள்ளினர். மேலும், அந்த இடத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையறிந்த மற்றொரு தரப்பினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, வன்முறை கட்டுக்குள் வந்தது. எனினும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “அந்த இடத்தில் நேற்று முன்தினம் படேல் சிலை நிறுவப்பட்டது. ஆனால், அங்கு அம்பேத்கர் சிலையைத்தான் வைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் விரும்பினர். இதனால், படேல் சிலையை அகற்றி இருக்கிறார்கள். இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.