ஒடிசாவில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய உயிர்போகும் தறுவாயிலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தில் பயணித்த 60 பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. படபூர் சாக் பகுதி வழியாக பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், பயணிகளைப் பாதுகாக்கும் பொருட்டு பேருந்தின் வேகத்தைக் குறைத்து, சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்தினார்.
பேருந்தை நிறுத்திய சில நொடிகளிலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அப்பகுதி மக்களின் உதவியுடன், ஓட்டுநரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பயணி அமித் தாஸ் கூறுகையில், ஓட்டுநர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பேருந்தை நிறுத்தினார். சாலையின் ஒரு ஓரத்தில் வாகனம் நின்றவுடன் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று கூறினார்.
தன்னுடைய உயிர்போகும் தறுவாயிலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தில் பயணித்த 60 பயணிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுநருக்கு பயணிகள் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தனர்.