நீட் முதுகலை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரூ.750 குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
நீட் தேர்வில் எழுதும் மாணவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் , நீட் முதுகலை தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி, மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியம், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தேர்வுக் கட்டணத்தை ரூ.750 குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இதுகுறித்து அந்த கடிதத்தில் டாக்டர் அபிஜத் ஷெத், ” மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் தலைமைக்கு எனது நன்றியைம் தெரிவித்துக் கொள்கிறேன், NBEMS தனது நோக்கத்தை அடைவதிலும், இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளது” என்று எழுதியுள்ளார்.
என்பிஇஎம்எஸ் ( NBEMS ) தேர்வில் பங்கேற்கும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக , ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூ.750 தேர்வு கட்டணத்தை குறைக்க என்பிஇஎம்எஸ் முடிவு செய்துள்ளதாக அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு, பிறகு வரவிருக்கும் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் கட்டணம் குறைக்கப்படும், மத்திய சுகாதார அமைச்சரின் உள்ளீடுகள் இல்லாமல் இந்த கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை.
உங்கள் வழிகாட்டுதலின் கீழ் அதிக நிபுணத்துவம் உள்ள பணியாளர்களை வழங்குதல், தரமான தேர்வுகளை நடத்துதல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல், போன்றவற்றில் NBEMS தொடர்ந்து பணியாற்றும் என்று எங்கள் குழு சார்பாக நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.