எல்லை சாலைகள் அமைப்பில் தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மொத்தக் கருணைத் தொகை வழங்க 179 வேலை நாட்களை நிறைவு செய்யவேண்டும் என்பதிலிருந்து விலக்களிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போதுள்ள விதிகளின்படி, எல்லை சாலைகள் அமைப்பில் குறைந்தது 179 நாட்கள் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த 179 வேலை நாட்கள் என்ற வரையறையின் காரணமாக இக்காலகட்டத்திற்குள் இறந்தவர்களின் குடும்பங்கள் இந்த மானியத்தை இழந்துள்ளன.
எல்லை சாலை அமைப்பின் பணியிடங்கள் முறையான பொது மற்றும் சிறப்பு மருத்துவ வசதிகள் இல்லாத தொலைதூர, பனி சூழ்ந்த, உயரமான பகுதிகளில் அமைந்துள்ளன.
எதிர்பாராத தட்பவெப்ப சூழல், வாழ முடியாத மலைப்பாங்கான நிலப்பரப்பு, அபாயகரமான பகுதிகள், தொழில்சார்ந்த சுகாதார சீர்கேடுகள் போன்ற காரணிகள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிருக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த மரண சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் குறைந்தபட்சம் 179 வேலை நாட்கள் என்ற நிபந்தனையை நீக்குவது, அரசுப் பணியில் இருக்கும்போது வருவாய் ஈட்டும் திறனை இழக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.