உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது.
பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இங்கு கிரிமினல் சட்டங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், சிவில் விவகாரங்களில் அப்படி இல்லை. சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது.
ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.
இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசுக்கு முன்னதாகவே, உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார். மேலும் பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவானது வரைவு அறிக்கையை தயார் செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீது நேற்றும் இன்றும் விவாதங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறியுள்ளது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது. இந்த சட்ட மசோதாவில் லிவ்-இன் உறவில் இருப்போர் இதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.. விதிகளை கடைப்பிடிக்கத் தவறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதேபோல், பல தார திருமணங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்பு கோவாவில் போர்ச்சுக்கீசிய ஆட்சி இருக்கும் வரை இந்த சட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.