மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, அந்த சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இதனையடுத்து ராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார். இதையடுத்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக ஜரங்கே அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஜரங்கே, தன் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தமக்கு எதிராக தகவல் பரப்பி வருவதாகவும், அவரது இல்லம் முன் போராட்டம் நடத்தப்போவதாக மனோஜ் ஜரங்கே அறிவித்தார். இதனயைடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக ஜல்னா, சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் பீட் மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.