அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 2022 -2023 ஆண்டு பயணவழி உணவக ஒப்பந்தத்தில் சுமார் ரூ2 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கீழ், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022 -2023 ஆண்டு பயணவழி உணவக ஒப்பந்தத்தில் சுமார் ரூ2 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஊழல் முறைகேடு நடைபெற காரணமான அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை நிர்வாக இயக்குநர் இளங்கோவன் மற்றும் இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட துறை அதிகாரிகள் மேலும் சம்மந்தப்பட்ட உணவக உரிமையாளர்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறப்போர் இயக்க
நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், போக்குவரத்துக் கழகம் இழந்த தொகை மீட்கப்படவேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை செயலாளர் பனீந்திர ரெட்டி உள்ளிட்டோர்களுக்கு அறப்போர் இயக்கம் சார்பில் புகார் மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.