சேவைக் கட்டணம் செலுத்துவது தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக, தனது Play Store இல் இருந்து மேட்ரிமோனி உள்ளிட்ட இந்திய செயலிகளை Google நிறுவனம் நீக்கிய நிலையில், அரசாங்கத்தின் தலையீட்டால் அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளது.
கூகுள் Play Store இல் இருந்து தனியார் செயலிகளை பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து கட்டண சேவையாக இதுவரை கூகுள் 11 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது.
தற்போது, இந்தக் கட்டணத்தை கூகுள் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன்படி, 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தாத 10 இந்திய நிறுவன செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, “இந்தியா மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் கொள்கை மிகத் தெளிவாக உள்ளது. கூகுளின் இந்த அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. எங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும். இந்தியா ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்அப்களை கொண்ட ஒரு வலுவான ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கியுள்ளது.
சர்ச்சையை விரைவில் தீர்க்க, பாதிக்கப்பட்ட நிறுவனங்களையும், கூகுள் நிறுவனத்தையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். இந்த பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, கூகுள் நிறுவனத்தினால் நீக்கப்பட்ட இந்திய ஆப்கள் மீண்டும் பிளே ஸ்டோருக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.