சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் அமைந்துள்ளது.
முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் வகையில் சூரபத்மனுடன் போர் செய்த பின்னர், வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் போர் புரிந்து கோபம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால் இதற்கு தணிகைமலை என பெயர் பெற்றது.
திருத்தணிகையில் முருகனை வழிபட்டு சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றை திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது. மேலும், முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது.
டிசம்பர் 31 -ம் தேதி வருடத்தின் நாட்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 படிகளுக்கும் பூஜை செய்து படி ஒன்றுக்கும் ஒவ்வொரு பாட்டினை இசைத்து பாடிச் சென்று மலைக்கோயிலைல் சுவாமி தரிசனம்செய்வது பக்தர்கள் வழக்கம். அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேல் காவடிகள் எடுத்து இறைவனைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை வணங்கினால், பக்தர்களுக்கு ஏற்படும் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவை விலகிடும் என்பதால், தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற பசுமைத்தன்மையும் நிறைந்த, அமைதி மிகுந்த இடமாகத் திகழ்கின்ற இந்த இடம், தவத்திற்கும் தியானத்திற்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றது.