இந்தியா – சீனா எல்லையில், கூடுதலாக 10,000 இராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இவர்கள் மேற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். லடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த 2020-ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த சீன இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்ததில் இருந்து, சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகள் எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கின்றன. கார்கில் உட்பட சில இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.
அதேபோல, கடந்த 2020-ஆம் ஆண்டு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீனாவுக்கும், இந்தியா பதிலடி கொடுத்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில், மேம்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்களை இந்தியா நிலைநிறுத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், எல்லையில் உட்கட்டமைப்பு அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா – சீனா எல்லையில், கூடுதலாக 10,000 இராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இவர்கள் மேற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் முதல் இமாச்சல பிரதேசம் வரையிலான, இந்தியா-சீனா எல்லையில், இந்த வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியா – சீனா எல்லையில் உள்ள இந்தப் பகுதியில் ஏற்கனவே 9,000 இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.