சென்னையில் வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார் எழுந்தது. அதன்பேரில், வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனுக்குச் சொந்தமான தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 7 மணி முதல் 5 மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று, சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல தனியார் மதுபான பாரிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், சென்னையில் பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வேப்பேரி உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.